Wednesday, November 26, 2014

காங்கிரஸில் இணைந்தார் நடிகை குஷ்பு; சோனியாவுடன் சந்திப்பு!!!




சென்னை: நடிகை குஷ்பு,  சோனியா காந்தியை இன்று மாலை டெல்லியில் சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 
திமுக முக்கிய பேச்சாளராக விளங்கிய  நடிகை குஷ்பு, குறுகிய காலத்தில் அக்கட்சியின் முன்னணி பிரசார பிரமுகராக வலம் வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அக்கட்சியிலிருந்து திடீரென விலகினார்.
தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? என்பது பற்றி குஷ்பூ தனது  கருத்தை சுதந்திரமாக வெளியிட்டதால் ஏற்பட்ட எதிர்ப்பை அடுத்து திமுகவில் இருந்து விலகினார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன், நடிகை குஷ்பு பா.ஜ.க.வில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதனை குஷ்பு மறுத்திருந்தார்.
சோனியாவுடன் சந்திப்பு
இந்நிலையில், நடிகை குஷ்பு சற்றுமுன்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது அவரது முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார்.
இதனை  குஷ்புவுடன் சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.
தமிழக காங்கிரஸில் ஓரளவு தொண்டர்கள் செல்வாக்கு உள்ளவராக திகழ்ந்த ஜி.கே. வாசன், அக்கட்சியிலிருந்து விலகிவிட்ட நிலையில், அக்கட்சியில் மக்கள் செல்வாக்கு உள்ள 'மாஸ் லீடர்' என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக யாரும் இல்லை.
இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை குஷ்பு மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளார் என்றே கூறவேண்டும். அதே சமயம் குஷ்புவை பார்க்கவும், அவரது பேச்சை கேட்கவும் திரளும் கூட்டம் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு வாங்கித்தருமா? என்பதை எதிர்கால தேர்தல் முடிவுகள்தான் சொல்லும். 

No comments:

Post a Comment