Sunday, November 23, 2014

நானும் சில்வஸ்ட்டர் ஸ்டாலோனும் பரம எதிரிகளாக இருந்தோம்: டெல்லியில் மனம் திறந்தார், அர்னால்ட்!!!!

புதுடெல்லி, நவ.22-
20 வயதில் உலக ஆணழகன் பட்டம் வென்றவர். முறுக்கு தேகத்தையும்,
 முரட்டு தோற்றத்தையும் மூலதனமாக வைத்து ஹாலிவுட்டில்
கதாநாயகனாக நடித்தவர். ‘டெர்மினேட்டர்’ என்ற சாகசப் படத்தின்
மூலம் உலக சினிமா ரசிகர்களின் இதயங்களில் நீங்காத
தனியிடத்தைப் பிடித்தவர்.
இந்த செல்வாக்கையே மூலதனமாக வைத்து அமெரிக்காவின்
கலிபோர்னியா மாநில கவர்னராக இருமுறை தேர்வு
 செய்யப்பட்டவர் என பன்முகங்களை கொண்டவர்,
 அர்னால்ட் ஸ்குவார்ஸனேகர்(67).
வாயில் நுழையாத பெயருக்கு சொந்தக்காரர் என்று
 இவருக்கு தனிப்பெயர் வைத்தும் இந்திய ரசிகர்கள் அழைப்பதுண்டு.
‘ராக்கி’ படவரிசைகளின் மூலம் அதிரடி குத்துச் சண்டை
 நாயகனாக பிரபலமடைந்த ஹாலிவுட்டின் மற்றொரு
 முன்னணி கதாநாயகனான சில்வஸ்ட்டர் ஸ்டாலோனுடன்
இவர் நடித்த ‘தி எக்ஸ்பாண்டபுல்ஸ்’, மற்றும் ‘எஸ்கேப்’
 போன்ற திரைப்படங்கள் வசூலில் பட்டையை கிளப்பி
 சாதனை படைத்தன.
தன்னுடன் சக கதாநாயகனாக நடித்த ஸ்டாலோனுடன்
 தனக்கு இருந்த தொழில் போட்டியையும், அதனால்
 இருவரும் ஒருவரை ஒருவர் வெறுத்து, பரம எதிரிகளாக
இருந்ததையும், அந்த கசப்பை எல்லாம் மறந்து பின்னர்,
நெருங்கிய நண்பர்கள் ஆனதையும் டெல்லியில்
 ஒரு பிரபல நாளிதழ் நேற்று நடத்திய விழாவில்
பேசிய அர்னால்ட் ஸ்குவார்ஸனேகர் குறிப்பிட்டார்.
‘நாங்கள் இருவரும் ஒரே தொழிலில் இருந்ததால்
 1980-களின் துவக்க ஆண்டுகளில் ஒருவரை ஒருவர்
 வெறுத்தோம்; ஒருவரையொருவர் வீழ்த்த நினைத்தோம்.
அது ஒரு வெளிப்படையான போர். யாருக்கு வலிமை
அதிகம் என்பதை நிரூபிக்கும் போட்டி.
திரையில் அதிகம் பேரை யார் சாகடிக்கிறார்கள்?, நவீன
பாணியில் யார் கொல்கிறார்கள்? பட வசூலில் யார் சாதனை
 படைக்கிறார்கள்? என்பது தொடர்பான பெரும் போட்டியாக
 அது இருந்தது.
பின்னர், 90-களில் நாங்கள் நண்பர்கள் போல் பழக
ஆரம்பித்தோம். அதில் இருந்து நண்பர்களாகி விட்டோம்.
ஆரம்பத்தில், நமக்கு ஒரு போட்டியாளர் தேவை; நீங்கள்
வெறுக்கக் கூடிய அளவில் ஒரு போட்டியாளர் தேவை.
ஏனெனில், அந்தப் போட்டிதான் என்னை இத்தனை
தூரத்துக்கு விரட்டி வந்துள்ளது.
ஒரு கட்டத்தில், இந்தப் போட்டி, பகைக்கு எல்லாம்
 முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு நாம் முதிர்ச்சி
அடைந்து விட்டோம் என்று நாங்கள் உணரத் தொடங்கியதும்
 ஒன்றாக சேர்ந்து நடிக்க ஆரம்பித்தோம். அதன் மூலம்
 பல நல்ல அனுபவங்களை அடைந்தோம்.
வாழ்க்கையில் பெரிய இலக்குகளை அடைவதற்கு
 தெளிவான நுண்நோக்குத் திறன் தேவை. எப்போதுமே,
 எல்லாவற்றிலுமே சிறந்து விளங்க வேண்டும் என்ற
எண்ணம் எனக்குள் இருந்தது. வாழ்க்கையில் பல
 தோல்விகளை சந்தித்தேன். ஆனால், தோற்கும்போது
 மீண்டும் எழுந்து உங்கள் இலக்கை நோக்கி முன்னேறி
 செல்வதுதான் நம்மை வெற்றியாளர்களாக்கும்.
இதேபோல், குழந்தைகள் தங்களுக்கு என்ன வேண்டுமோ
அதைத்தான் செய்ய வேண்டும். மற்றவர்கள் சொல்வதை
 கவனிக்கக் கூடாது. உங்களால் சில காரியங்களை
செய்ய முடியாது என பிறர் கூறக்கூடும். நடிப்பில்
ஆகட்டும், அரசியலில் ஆகட்டும்- என்னையும் அப்படி
சிலர் கூறியதுண்டு. ஆனால், நீங்கள் உங்களது
குறிக்கோளை மட்டுமே பின்பற்ற வேண்டும்.
நான் இந்தியாவுக்கு பலமுறை வந்துள்ளேன். இந்தியா
 ஒரு மிகப்பெரிய நாடு. இங்கு வருவதை நான் மிகவும்
விரும்புகிறேன். இங்கிருக்கும் மக்கள் திறமையானவர்கள்;
 கடின உழைப்பாளிகள். இங்கு வரும்போதெல்லாம்
எனக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. நான்
விரைவில் மீண்டும் வருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment